திருச்சித்திரக்கூடம் (சிதம்பரம்)
திருச்சித்திரக்கூடம் (சிதம்பரம்) காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயோடு நின்று தவஞ் செய்ய வேண்டா திருமார்பனைச் சிந்தையுள் வைத்து மென்பீர் வாயோது வேதம் மலர்கின்ற தொல்சீர் மறையாளும் நாளும் முறையால் வளர்த்த தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத் திருச்சத்திரக்கூடம் சென்று சேர் மின்களே! - திருமங்கையாழ்வார். 108 திவ்ய தேசங்களில் இது 41வது திவ்ய தேசமாகும். சோழநாட்டு திருப்பதிகளில் 40 வது ஆகும். மூலவர் -கோவிந்தராஜ பெருமாள். உற்சவர் -தேவாதி தேவன், பார்த்தசாரதி, சித்திரகூடத்துள்ளான். தாயார் -புண்டரீகவல்லி. தீர்த்தம் -புண்டரீக தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள். விமானம் -சாத்வீக விமானம் தில்லை நடராஜர் (மூலவர்)
தலப்பெயர்கள் தென்புலியூர், தில்லைவனம், கோயில், பெறும்பற்றுப் புலியூர், புலிச்சரம், திருச்சிற்றம்பலம், தில்லைநகர், திருச்சிற்றக்கூடம், புண்டரீகபுரம் எனப் பலப் பெயர்கள்.
புராணம் : கலிங்க நாட்டு மன்னன் கவேரனின் மனைவி லோபமுத்திரை. இவர்களுக்கு புத்திரப் பாக்கியம் வேண்டி கடும் தவம் மேற்கொண்டான். காவிரியே அவர்களுக்கு மகளாகப் பிறந்தாள். அகத்திய முனிவர் காவிரியை நதியாக மாற்றினார். காவிரியில் தாயும் தந்தையும் நீராட வரும்போது 'உன்னைப் போல் நாங்களும் சாகாவரம் பெற்று எந்நாளும் வாழும் பேறு வேண்டும்!' சென்று காவிரியிடம் வேண்ட, 'அதற்கு வரம் அளிக்கும் சக்தி திருமால் ஒருவருக்குத்தான் உண்டு. எனவே அருகாமையில் இருக்கும் தில்லைவனம் சென்று 'கோவிந்தா! கோவிந்தா!' என்று கூறி தவம் இருக்குமாறு கூறினாள். அதன்படி அங்கு சென்று தவம் இருக்க, பெருமாள் காட்சி தந்து இருவருக்கும் வைகுந்தம் (மோட்சம்) தந்தார். கோவிந்தா என்னும் நாமத்தாலே இவ்விடத்தில் பக்தர்களுக்கு வைகுந்தம் கிட்டியதால் எம்பெருமானுக்கு கோவிந்தராஜன் என்னும் திருநாமம் உண்டாயிற்று.
பராசரன் என்னும் முனிவர் திருமாலை குறித்து தவம் செய்கையில் தஞ்சகன், கஜமுகன், தண்டகாசுரன் என்னும் மூன்று அரக்கர்கள் அவர் தவத்தை கலைக்க முற்பட, முனிவர் வேண்டுதலின்படி மகாவிஷ்ணு கருடன்மீது வந்து தஞ்சகன், கஜமுகன் இருவரையும் சம்ஹாரம் செய்ய, தண்டாசுரன் மட்டும் அங்கிருந்த பிலத்தின் (குகை) வழியாக ஓடி பாதாளத்தில் ஒளிய, அவனைப் பின் தொடர்ந்த எம்பெருமான், தனது முகக்கோட்டால் அவனைக் கீறிக் கிழித்துப் போட்டுவிட்டு பாதாளத்திலிருந்து பூமியை பிளந்து கொண்டு பூவராகப் பெருமாளாக எழுந்தருளினார். இவ்வரக்கர்களுக்கு சில்லி, தில்லி என்னும் இரு சகோதரிகள் இருந்தனர். அவ்விருவரும் சகோதரர்களை சம்ஹாரம் செய்த பூவராகப் பெருமாளைச் சரணடைந்து, 'எங்களுக்கு நல்வழி காட்டுங்கள்!' என்று வேண்ட, 'நீங்கள் விரும்புவதைத் தருகிறேன்' என்றவரிடம் சில்லி ஆனவள் 'தங்களுக்கே நான் காவலாக இருந்து காக்கின்ற வரம் வேண்டும்!' எனக் கேட்டு வரத்தை பெற்று சில்லி ஸ்ரீமுஷ்ணம் கோவிலைக் காவல் காக்க ஆரம்பித்தாள்.
தில்லி திருநாடு கேட்க, 'அருகில் உள்ள புண்டரீகப்புரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் திருநீராடி தன்னைக் குறித்து தவம் இருக்குமாறு சொல்ல, அவ்வண்ணமே செய்தாள். அவளிடத்தில் வந்து புள் (கருடன்) வந்து 'எம்பெருமானை தரிசித்து தில்லி தானும் சில்லியைப் போல், எம்பெருமான் வீட்டில் மரமாக இருந்து காத்து வரவேண்டும்!' என வேண்ட, எம்பெருமான் சம்மதம் தெரிவித்தார். புண்டரீகப்புரத்தை சுற்றி அழகான தில்லை காந்தள் விருட்சமாக விருந்து பரந்து நின்றார். திருமால் தில்லை கோவிந்தனாகப் பள்ளி கொண்டார்.
புராணம் -2 : சிவனும் பார்வதி தேவியும் மனக்களிப்புடன் ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவுக்கு நடனம் புரிந்ததனர். இதைப் பார்த்த விநாயகர், முருகனிடம் 'யார் நடனம் சிறப்பாக இருந்தது. எனக் கேட்க, அவ்விருவரும் 'உமையவள் நடனமே மிகவும் சிறந்தது' எனக் கூற, சிவன் கோபமுற்று 'நீங்கள் சிறுவர்கள். உங்களுக்கு தீர்ப்பு சொல்ல தகுதி போதாது!' என்று கூறி பிரம்மனிடம் சென்று நடந்ததைச் சொல்லி கேட்க, 'நீங்கள் இருவரும் திருவேங்கடத்திற்கு தெற்கே மூன்று யோசனை தூரத்தில், காஞ்சிபுரத்திற்கு வாயு திசையில் ஆலங்காட்டில் (திருவாலங்காடு) சென்று நடனமாடுங்கள்! நான் வந்து தீர்ப்பளிக்கிறேன்!' என்றார் பிரம்மா. அவ்விடத்திற்கு சென்று இருவரும் நடனமாட, நாமகளுடன் வந்த பிரம்மன், பிற தேவர்களும் பார்த்து என்ன தீர்ப்பளிப்பது என்று புரியாமல் இவர்கள் ஆட்டத்தைப் பற்றி வியந்து வியந்து பேசிக் கொண்டே இருந்தனர். பிரம்மன் எழுந்து, 'இதற்கு தீர்ப்பு சொல்லும் தகுதி தனக்கில்லை! திருமால் ஒருவரால் தான் இதற்கு தீர்ப்பு அளிக்க முடியும்!' என்று சொல்ல, எல்லோரும் வைகுந்தம் சென்று, நடந்ததைச் சொன்னார்கள். கேட்ட திருமால் 'தில்லை வனத்துக்கு வந்து நடனம் ஆடும்! அப்போது தீர்ப்பு வழங்குகிறேன்!' என்று சொன்னவர், தேவதட்சனான விஸ்வகர்மாவை நோக்கினார்.
உடனே விஸ்வகர்மா அரக்கர்களின் தச்சன் மயனுடன் தில்லை வனத்துக்குச் சென்றார். அங்கு சென்று நடன மையத்தில் சித்திரக்கூடத்தை அமைத்தான். ஐந்து பூதங்களை ஐந்து கலசமாக்கி, நான்கு வேதங்களையும் நான்கு கோபுரமாக்கினான். 36 ஸ்மிருதி சூத்திரங்களை 36 வாயில்களாகவும், 5 யக்ஞங்களை 5 மதில்களாகவும், 6 அங்கங்களை 6 வாயிலாகவும், 6 தரிசனங்களை 6 கதவுகளாகவும் 3 வியாக்கிருதிகளை 3 மாடங்களாகவும் 100 தம்பங்களை நூற்றுக்கால் மண்டபமாகவும் அமைத்து சித்திரக்கூடத்தை கனகசபை, இரத்தின சபை, நாகசபை, தேவசபை, ராஜசபை என தோற்றுவித்தான். மேற்படி அமைப்புடன் கூடிய சபையில் நடனமாடினர். யார் நன்றாக ஆடினார் என்று கூற முடியாமல் தேவகணங்களும், தேவலோக நடன மாதர்களும், சர்வ லோகமும் திகைத்து மெய்மறந்து இருக்க உக்கிரமடைந்த ருத்திரன், (சிவன்) தனது இடது காலைத் தரையில் ஊன்றி, வலது காலை தன் தலைக்குமேல் உயர்த்தி நிறுத்த, பெண்ணுக்குரிய நாணத்தால், தான் அவ்வாறு செய்ய இயலாது என வெட்கித் தலைகுனிந்தாள். 'ஈசனே வென்றார்!' என்று சபையோர் அனைவரும் தீர்ப்பு கூற, திருமாலும் அதற்கு இசைவு தெரிவித்தார். உமையவள் காளியாக மாறி தில்லைவனத்தைச் சுற்றித் தாண்டவம் ஆடி, வனத்துக்கு வடக்கே போய் அங்கே ஒரு காவல் தெய்வமாய் நின்றாள். ஈசன் தாங்களும் இதே திருக்கோலத்தில் இவ்விடத்தே எழுந்தருளி, பக்தர்களுக்காக அருள்பாலிக்க வேண்டும் என கேட்க, அவ்வண்ணமே ஒப்புக்கொண்டார்.
சித்திரக்கூடம் சிதம்பரம் சபாநாயகர் திருக்கோவிலில் கோவிந்தராஜன் பெருமாளை முதன்முதல் பிரதிஷ்டை செய்தவர், கி.பி 726 முதல் 775 வரை ஆட்சி புரிந்த நந்திவர்ம பல்லவன்.
இத்தகவல் திருமங்கையாழ்வார் பாடிய பெரிய திருவாய்மொழியில் உள்ளது. பல்லவர்கள் சிவனின் இடபத்தினை இலட்சினையாகக் கொண்டவர்கள். அந்த பல்லவர் மரபிலே கி.பி 726 முதல் 775 வரை ஆட்சி புரிந்த நந்திவர்ம பல்லவன், திருமங்கை ஆழ்வார் தொடர்பினால் தீவிர வைணவராக மாறியதால், தில்லை சிற்றம்பலக் கோயில் முற்றத்தில் சபாநாயகர் கோயிலில், கோவிந்தராஜ பெருமாளைப் பிரதிஷ்டை செய்தனர். பெருமாளுக்கு தில்லைவாழ் அந்தணர்கள் முறைப்படி பூஜை செய்து வந்தனர். இவர்கள் பூஜை செய்ததை விரும்பாத வீர வைஷ்ணவர்களில் சிலர், தில்லைச் சிற்றம்பலக் கோயில் பூஜை நடைமுறைகளுக்கு பலவிதச் தொல்லைகளைக் கொடுத்து வந்தனர். இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் வைணவத் தொல்லை பொறுக்காமல் இதற்கு காரணம் கோவிந்தராஜ் பெருமாள் மூர்த்தமே, இதைக் கொண்டு போய் கடலில் போடு! எனச் செய்தான் என்று இவனது அவைப் புலவராகிய ஒட்டக்கூத்தர் தான் பாடிய உலாவிலும், தக்கையாக பரணியிலும் குறிப்பிட்டுள்ளார்.
ராமானுஜர் தில்லைக் கோவிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கோவிந்தராஜ பெருமாள் மூர்த்தத்தை, இராமானுஜர் கீழ் திருப்பதிக்குக் கொண்டு சேர்த்து அங்கே பிரதிஷ்டை செய்தார் என்று இராமானுஜர் திவ்ய சரிதை கூறுகிறது. ராமானுஜரால் பிரதிஷ்டை செய்த திருவுருவம் இன்னும் அங்கே உள்ளது. தற்போது சிதம்பரம் கோவிலில் உள்ள கோவிந்தராஜப் பெருமாள், திரு ஒரு விஜயநகர அரசர் அச்சுதராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதை வரதராஜ ஐயங்கார் பாடிய பாகவத புராணம், திருவரங்கப்படலம் 63, 99 செய்யுட்களால் தெரிய வருகிறது. இங்கு பிரதிஷ்டை செய்த கோவிந்தராஜப் பெருமாளுக்கு வைணவர்கள் வழிபாடு செய்யும் உரிமையை அரசு உத்தரவுப்படி பெற்றனர். வேங்கடபதி தேவமகா ராயருடைய ஆட்சியில், அவர் பிரதிநிதியாகச் செஞ்சியில் இருந்து ஆட்சி புரிந்த வையப்ப, கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் என்னும் அதிகாரி, தில்லை வைணவர்கள் முயற்சிக்கு உடந்தையாம். கி.பி. 1597-ல் நடராஜர் கோயிலில் முதல் பிரகாரத்திலேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கு தனிக்கோயில் அமைக்கத் தொடங்கினான். நடராஜர் கோயிலுக்குள் புதிதாக தனிக் கோயில் கட்ட வேண்டாம். இரண்டாம் பிரகாரத்தில் முன்பிருந்த இடத்திலேயே பெருமாளுக்கு பூஜை செய்வது நல்லது எனத் தில்லைவாழ் அந்தணர்களும், நகரப் பொதுமக்களும் நயந்து கேட்டனர். கொண்டமநாயக்கன் அவர்களது வேண்டுகோளை பொருட்படுத்தாமல் கோவிந்தராஜப் பெருமாளுக்கு நடராஜர் சன்னதிக்கு மிக அருகிலேயே அமைக்கத் தொடங்கினான். தில்லைவாழ் அந்தணர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் அவன் செயலைத் தடுத்து நிறுத்த உறுதிபூண்டு, தாங்கள் உயிரோடு இருக்கும்வரை கோவிந்தராஜப் பெருமாளுக்கு கோயில் கட்ட இணங்க மாட்டோம் என்று சொல்லி, ஒருவர் வடக்கு கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள ஆரம்பித்தனர். இவ்வாறு இருபது பேர் உயிர் விட்டதைக் கொண்டம நாயக்கன் கோபுரத்தின் மேலேறி தற்கொலை செய்து கொள்ள முயல்பவர்களை சுடும்படி உத்தரவுவிட, அதன்படி இரு அந்தணர் சுடப்பட்டு இறந்தனர். இந்த துன்பநிலையை பொறுக்காத தில்லை அந்தணர் குடும்பத்தைச் சேர்ந்த அம்மையார் ஒருவர், தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தகவலை மேலைநாட்டில் இருந்து பிமெண்டா என்ற பாதிரியார் தன் யாத்திரைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
விஜயநகர மன்னனாகிய மூன்றாம் சீரங்கராயன் கி.பி. 1643-ல் கோவிந்தராஜர் சன்னதியை மேலும் விரிவுபடுத்த எண்ணி, புதிதாகக் புண்டரீகவல்லி தாயார் சன்னதியை அமைத்ததுடன், மேலும் பல சன்னதிகளையும் உருவாக்கினான். இதனால் கோயிலில் முன்பிருந்த பெரும்பகுதிகள் இழக்கப்பட்டது. வைணவர்கள் கோயிலின் பெரும் பகுதிகளைத் தமக்கு உரிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர். அதன் தொடர்ச்சியாக விழாக்களும் நடத்தப்பட்டன. கி.பி. 1849-ல் பிரம்மோற்சவம் நடந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து அந்தணர்களும் மற்றவர்களும் பெரிய அளவில் எதிர்க்க ஆரம்பித்தனர். பின் 1862 -ல் இருதரப்பும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி 'கோவிந்தராஜப் பெருமாளுக்கு செய்து வரும் நித்திய பூஜைகளைத் தவிர வேறு விழாக்களோ, பிரம்மோற்சவமோ நடத்துவதில்லை எனவும், நடராஜருக்கு தொன்றுதொட்டு நடைபெற்று வரும் நித்திய பூஜைகளிலும், திருவிழாக்களிலும் தாம் தடையாக இருப்பதில்லை!' எனவும் ஒப்புக்கொண்டு உறுதி அளித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் கி.பி. 1867 -ல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 'இதன்பின் தில்லைப் பெருங்கோயிலில் சைவரும் வைணவரும் அன்பினால் ஒன்றுகூடி நடராஜர், கோவிந்தராஜர் இருபெரும் தெய்வங்களையும் வழிபட்டு மகிழ்வதற்குரிய அமைதியான சூழ்நிலை தொடர்ந்து நிலை பெற்றுள்ளது என்பதை இத்திருக்கோயிலுக்கு வரும் அன்பர்கள் எல்லோரும் நன்குணர்வர்!' என்று வெள்ளை வாரணார் எழுதிய 'தில்லை பெருங்கோயில் வரலாறு' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நின்ற இடத்திலேயே... சித்சபை எனப்படும் இக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு அருகிலேயே கோவிந்தராஜப் பெருமாள் கொடிமரத்துடன் தனிக் கோவிலில் மூலவராக இருக்கிறார். பெருமாள் சன்னதிக்கு முன் மண்டபத்தில் நின்று பார்த்தால், நடராஜர், கோவிந்தராஜர் மற்றும் அவரது நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியும். இதுபோல் வேறு எங்கும் காண முடியாது! மூலவர் மூலவர், பிரம்மா, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தனது காலடியில் இருக்க, ஏழு தலைகளுடன் கூடிய ஆதிசேஷன்மேல் சயனித்துள்ளார். மூலவர் கையில் சங்கு மற்றும் சக்கரம் உள்ளது. பெருமாள் சாலக்கிராமம் மாலையும், இடுப்பில் தசாவதார உருவங்களை அணிந்துள்ளார். பிரம்மா பொதுவாக திருமாலின் நாபிக்கமலத்தில் பிரம்மா அமர்ந்தபடி இருப்பார். ஆனால் இங்கு நான்கு முகங்களுடன் நின்றபடி உள்ளார். இதுபோல் வேறு எங்கும் காண முடியாது எனலாம். உற்சவர் உற்சவர் தேவாதி தேவன் தாயயார்களுடன் அமர்ந்த கோலத்திலும், மற்றோர் உற்சவர் சித்திரக் கூடத்துள்ளான் பாதத்திற்கு அருகில் நின்ற கோலத்திலும் காட்சியளிக்கிறார். காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் வளாகத்தில் நாராயணன், நிலா, (திங்கள்) தொண்டன் பெருமாளாக காட்சியளிப்பது போல் இங்கு உள்ள சிவன் சன்னதிக்கு அருகில் கோவிந்தராஜகர் சேவை சாற்றுகிறார். சன்னதிகள் ராமர், சீதை, லக்குமணன், புண்டரீக வல்லி தாயாருக்கு தனிச் சன்னிதி. மற்றும் ஆஞ்சநேயர், நரசிம்மர், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், ஆண்டாள், உடையவர்கள் வேணுகோபாலன், கூரத்தாழ்வார், விஷ்வக்சேனர் உள்ளனர்.
தவம் பதஞ்சலி, கண்ணுவர் இருவரும் பெருமாள் பிடித்து தவம் செய்து பலன் பெற்றனர். காட்சி கண்டவர்கள் தில்லை மூவாயிரம் அந்தணர்கள், சிறுவன், உமையாள், பாணினி, வியாக்கரபாதர் போன்றோர். வழிபட்டோர். பாடியுள்ளார். சிவன், பார்வதி, நந்தி, வாசுகி, கைலாயத்தில் உள்ளவர்கள், ராமன் - ஆழ்வார்கள் ராமன் சித்திரக்கூட மலையில் மிகவும் மகிழ்வோடு இருந்தான். அதே ராமன் கோவிந்தராஜன் என்ற பெயரில் இந்த திருச்சிற்றம்பலத்தில் சேவை சாற்றுகிறான் என்று குலசேகர ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் தமது பாக்களில் பாடியுள்ளனர். திருவிழா ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், சித்திரை 10 நாட்கள், வசந்த உற்சவம், கஜேந்திர மோட்சம். பிரம்மோற்சவம் இங்கு ஆண்டுதோறும் பெருமாள் சன்னதியில் பிரம்மோற்சவம் நடைபெற்றது என்பதை 'கைத்தொழ வீதிவருவான் சித்திரக்கூடத்துள்ளானே! தெய்வப் புள்ளேறி வருவான் சித்திரக்கூடத்துள்ளானே தெருவில் திளைத்து வருவான் சித்திரக்கூடத்துள்ளானே' என திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
தற்பொழுது கோவிந்தராஜப் பெருமாளுக்கு மீண்டும் பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்ததற்கு, நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதன் விசாரணையை ஜூன் 24-க்கு தள்ளி வைத்துள்ளது. தீர்ப்பு எப்படியோ பெருமாளுக்கே வெளிச்சம்! பிரார்த்தனை வேண்டிக்கொண்ட செயல்களில் வெற்றி பெறவும், நீதி தவறாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம். நேர்த்திக்கடன் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர். கோயில் திறப்பு தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும் தெரிந்திருக்கும். இருப்பிடம் சிதம்பரம் நகர மையப் பகுதி நடராஜர் ஆலயம். அதனுள் கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் 3.11.2025 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.



Comments
Post a Comment